கோவை:கோவை அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் சுகாதார வசதி தொடர்பாக, 100 பேரிடம் மாவட்ட நிர்வாகம் கருத்து கேட்டுள்ளது.
இதில், கழிப்பறை வசதி மட்டும் சுமாராக இருப்பதாக, மக்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, ஏழை எளிய மக்கள் மருத்துவ சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனையை நாடுகின்றனர்.
கொரோனா சிகிச்சைக்கு திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், சேலம், கரூர் மாவட்டங்களில் இருந்தும், நோயாளிகள் வருகின்றனர்.
மருத்துவமனை நிர்வாகம் திணறியதால், மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் கைகோர்த்து பணிகளை பிரித்து, செய்து வருகின்றன.
சேவையை மேம்படுத்தி, வேலைகளை முடுக்கி விடுவதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி காயத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சேவை குறைபாடு; உயிரிழப்பு அதிகரிப்பு; பணம் பறிக்கிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டு தொடர்பாக, 100 பொதுமக்களிடம் மாவட்ட நிர்வாகம் தரப்பில், கருத்து கேட்கப்பட்டது.
நாளொன்றுக்கு டாக்டர், 3 தடவை நலம் விசாரிக்கிறார் என, 61 சதவீதத்தினரும், 2 தடவை என, 28 சதவீதத்தினரும் கூறியுள்ளனர்.
செவிலியர்களின் சேவையை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
மருந்து கொடுப்பதில் 96 சதவீதம், உணவு வழங்குவதில் 99 சதவீதத்தினர் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர்.
கழிப்பறை வசதி மட்டும், மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வசதியை மேம்படுத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.