எப்போது உறங்குகிறார் இவர்?
எப்போது விழிக்கிறார்?
வீட்டிலா, மருத்துவமனையிலா,
இல்லை, போராட்டக்களத்திலா...
இப்போது எங்கு இருப்பார்?
ஒருநாள் பார்த்தால்....செவிலியர்களுக்கான
போராட்டத்தில் பங்கேற்று முழங்கிக்கொண்டிருக்கிறார்.
மறுநாள் பார்த்தால் ....மருத்துவர்கள் கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதப் பந்தலில் உட்கார்ந்திருக்கிறார்.
அடுத்தநாள் வீட்டிலிருப்பாரா? ஊஹூம்.
கல்விக் கருத்தரங்கொன்றில் பங்கேற்றுப் பேசுவார்.
கொரோனாப் பேரிடர் குறித்த ஆலோசனைகளுக்காக
சுகாதார அமைச்சரையும், சுகாதாரத்துறை செயலாளரையும் சந்திக்க இருப்பதாக ஆயத்தப்படுத்திக் கொண்டிருப்பார்.
கொரோனாவின் கோரத் தாண்டவத்தை தடுப்பது குறித்தும்,
தடுப்பூசிகளுக்காக மாநிலங்கள் மன்றாடுகிற அவலத்தைக் குறித்தும், தடுப்பூசி போட்டே ஆகவேண்டுமென்கிற
அவசியம் குறித்தும், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு செய்யவேண்டிய மாற்று ஏற்பாடுகள் குறித்தும்....
எந்தத் தொலைக்காட்சியிலாவது விவாத அரங்கங்களில்
நேர்மறையாய் உரைத்துக் கொண்டிருப்பார்.
இங்ஙனம்....
ஓயாது இயங்கி, பொழுதெலாம் ஊருக்கே செலவிட்டு, அதற்காகவே ஓடியாடுகிற தோழராகத்தான்
இவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்,
அறிந்த காலந்தொட்டு.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்கிற
கிருஷ்ண பரமாத்மாவின் கீதாவாசகம் மெய்யாகவே
'மெய்யான' கம்யூனிஸ்ட்களுக்கும் பொருந்துகிற மணிமொழி.
இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும்கூட.
எவ்வாறு ஓய்வறிவார்?
கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவும் எந்தப் போராட்டங்களின் - இயக்கங்களின் முன்வரிசையிலும் இவரைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.
சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின்
பொதுச்செயலாளர் டாக்டர் ஜி ஆர் ரவீந்திரநாத்.
'நீட் நுழைவுத் தேர்வு கூடவே கூடாதது' என்று
அது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து ஒலிக்கிற குரல் இவருடையதாகவே இருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
இன்று -
நீட் தேர்வு குறித்து பகுத்தாய்ந்து - பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்காமலிருக்க ஆலோசனைகள் வழங்குங்களென்று நீதிபதி ராஜன் தலைமையில் ஒரு எண்மர் குழுவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்திருக்கிறார்.
அக்குழுவில் தோழர் ரவீந்திரநாத்தும் இடம்பெற்றிருக்கிறார்
என்று சற்றுமுன்னம் தொலைக்காட்சிச் செய்திகளில் சொன்னார்கள்.
அக்குழுவின் பரிந்துரைகள் நேரிய துலாக்கோல் கொண்டு
வரையறுக்கப்படுமென்ற எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.
தொடரட்டும் தன்னலமற்ற
அவரது சமூக செயல்பாடுகள்....
முகநூல் நண்பர் குழாமுடன் இணைந்து
வாழ்த்து மலர்ச் சொரிகிறேன்.