Nurses Maternity Leave Getting Procedure Explained For a WhatsApp Question

 சார் வணக்கம்,
என் பெயர் _______,

நான் 2015 இல் XXXX_ அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பொழுது மகப்பேறு விடுப்பு எடுத்திருந்தேன்

இன்றுவரை எனது மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் வழங்கப்படவில்லை

நான் 2017 இல் XXXX_ அரசு மருத்துவமனையில் இருந்து YYYY அரசு மருத்துவமனைக்கு பணிமாறுதல் செய்யப்பட்டேன்.  தற்போது இங்கு பணிபுரிந்து வருகிறேன்.

இங்கு எனது பழைய மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது என கூறுகின்றனர்.

XXXX  மாவட்டத்தில் உங்களுடைய மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும், அந்த ஊதியத்தினை நீங்கள் தற்போது பணிபுரியும் மருத்துவமனையிலேயே பெற்றுக் கொள்ளலாம்   என்று கூறுகின்றனர்

இப்போது நான் என்ன செய்ய வேண்டும்

நன்றி.

அம்மா வணக்கம்

 இன்றுவரை MRB மூலம் பணியமர்த்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஏழை நோயாளிகளுக்கு பிரசவம் பார்த்து வரும் MRB ஒப்பந்த செவிலியர்களுக்கு, மகப்பேறு விடுப்புக்கான ஊதிய சட்டம் இருந்த போதிலும் மகப்பேறு விடுப்பு கூட (ஊதியம் பற்றி கூறவில்லை) அளிப்பது இல்லை என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் இருந்து, நிரந்தர அடிப்படையில் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்படும் செவிலியர்களுக்கு, அவர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியில் இணைந்த தேதியிலிருந்து பணி வரன்முறை ( Service Regularization) பணியமர்த்தும் அலுவலர் / இயக்குனர் அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு அடிப்படை விதிகளின்படி பணி வரன்முறை செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு அரசு ஊழியர் அல்லது அரசு செவிலியருக்கு அனைத்து விடுப்பு விதிகளும் பொருந்தும்.

இத்தகைய மிகவும் வலுவான சட்டங்கள், விதிகள் இருந்தபோதிலும், செவிலியர்கள் பெண்களாக இருப்பதாலும், செவிலியர்களின் மீதுள்ள அக்கறை இன்மை காரணமாகவும் செவிலியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல சலுகைகள் இன்றுவரை மறுக்கப்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆயினும் நாம் நம்முடைய தேவைகள் மற்றும் கோரிக்கைகளை சட்டப்படியாகவும், அரசு விதிகளுக்கு உட்பட்டும், உரிய வழியாகவும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

தற்போது நீங்கள் செய்ய வேண்டியது,

 நீங்கள் இப்போது பணிபுரியும் இடத்தில் தங்கள் பழைய இடத்தில் மகப்பேறு விடுப்பு எடுத்ததாகவும், அங்கே தங்களுக்கான பணி வரன்முறை செய்யப்படாத காரணத்தினால் ஊதியம் வழங்கப்படவில்லை என்பதையும் கூறி, உடன் அரசு விதிகள், உயர்திரு DMS மற்றும் உயர்திரு DPH அவர்களின் கடிதத்தின்படி தங்களுக்கு தற்போது ஊதியம் பெற்றுத் தர ஆவண செய்யுமாறு தங்களுடைய நிலைய உயர் அதிகாரி அவர்களுக்கு கடிதம் எழுத வேண்டும்.

மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் கோரும் மாதிரி கடிதம் ஒன்றினை இங்கு கிளிக் செய்து பெற்றுக் கொள்ளவும்

பொதுவாக அரசு மருத்துவமனைகளில் பல்வேறு அவசர பணிகள் அலுவலகத்தில் இருப்பதால், இது போன்ற காலம் கடந்த கடிதத்தின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் சற்று மந்தமாகவே இருக்கும்.

எனவே இதன் மீது நடவடிக்கை எடுக்க நாம் தான் அவர்களிடத்தில் தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.

 அலுவலகத்திலிருந்து

1)திருத்திய விடுப்பு ஆணை கோரும் கடிதம் Covering Letter,

2) Service Register இன் முதல் பக்கம் மற்றும் ஏற்கனவே ஊதியமில்லா மகப்பேறு விடுப்பு எடுத்த பதிவிற்கான அந்த Entry Page பக்கத்தின் நகல்

3) இது மகப்பேறு விடுப்பு தான் என்பதற்கான மருத்துவ அலுவலர் அவர்களின்  சான்று

4) தங்களுக்கான Leave Eligibility சான்று

5)தங்களின் கோரிக்கை கடிதம்

6) தங்கள் Regularization Order, ஆகியவற்றை இணைத்து உரிய வழியாக உயர்திரு இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

இயக்குநர் அலுவலகத்திலும் இக்கடிதத்தினை மிகவும் கவனத்துடன் பரிசீலித்து, தங்களுக்கான மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் பெறுவதற்கான திருத்திய ஆணையும், ஏற்கனவே ஊதியமில்லாமல் வழங்கப்பட்ட ஆணையை இரத்தும் செய்து புதிய ஆணை வழங்கப்படும்.

இதுவரை தங்களுடைய பணி வரன்முறை (Service Regularization) செய்யப்படவில்லை எனில் தற்போது முதல் வேலையாக தங்களின் பணி வரன்முறை, இயக்குநர் / பணி அமர்த்தும் அலுவலரிடம் இருந்து பெற்ற பிறகே இந்த மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்திற்காக கோரிக்கை தங்களால் அளிக்க முடியும்.

நன்றி.

Post a Comment

Previous Post Next Post