From Vijay Bhaskarvijay அவர்களின் Facebook பதிவிலிருந்து
ஏன் சமூக நீதி அறிவுடையவர்கள்
படித்து ஒரு பதவியில் அமரவேண்டும். அமர்ந்த பிறகும் அதே சமூக நீதி அறிவை கொண்டிருக்க வேண்டும்
என்று சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். ?
ஒரு ஆசிரியர் சில வருடங்களுக்கு முன்பு சொன்ன சம்பவம் இது.
அவர் கல்லூரியில் ஆசிரியராக இருந்த போது ஒரு கட்டுரைப்போட்டி நடந்ததாம்.
அதில் இரண்டு கட்டுரைகள் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கிறது.
ஒரு கட்டுரை மதத்துக்கும் அறிவியலுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை சொல்லும் மேலோட்டமான நோக்கமுள்ள நல்லமுறையில் எழுதப்பட்ட கட்டுரை.
கண்ணதாசன் எழுதி இருப்பாரே “இதற்குதான் தாலி கட்ட வேண்டும். இதற்குதான் மெட்டி போட வேண்டும்” என்ற ரீதியில் எழுதப்பட்ட யாவரையும் கவரும் ஆனால் நல்ல நோக்கமில்லாத கட்டுரை.
இன்னொன்று நதிநீர் சுத்தத்தை எப்படி காக்க வேண்டும் என்ற நன்நோக்கில் எழுதப்பட்ட சுமாரான கட்டுரை.
இரண்டை எழுதிய மாணவிகளில் மதக்கட்டுரை எழுதிய மாணவிக்கு நிறைய ஆதரவு இருந்திருக்கிறது.
“சார் அதுதான் நன்றாக இருக்கிறது. அதற்கே கொடுக்கலாம் “என்று சக ஆசிரியர்கள் சிபாரிசு செய்திருக்கிறார்கள். அதை எழுதிய மாணவி ஏற்கனவே பல பரிசுகள் பெற்று அனைத்து ஆசிரியர்களின் மனதை கவர்ந்தவரும் கூட.
சுற்றிலும் அப்படி ஒரு சிபாரிசு அவருக்கு வருகிறது. பல ஆசிரியர்கள் தவியாய் தவித்திருக்கிறார்கள்.
நடுவரை சுற்றி ஒரு கூட்டம் நிற்பதைக் கண்ட பிரின்சிபல் வந்து “ இங்க யாரு நடுவர்” என்று கேட்டிருக்கிறார்.
அனைவரும் இவரை சுட்டி இருக்கிறார்கள்.“அவரு முடிவுதான் ஃபைனல்.மத்தவங்க போங்க”என்று பிரின்சிபல் விரட்டி விட்டிருக்கிறார்.
இப்போது தீர்ப்பு சொல்லும் பொறுப்பு இவருக்கு வந்திருக்கிறது. இவர் மறுபடியும் அந்த இரண்டு கட்டுரையையும் படிக்கிறார்.
அந்த மதத்தையும் அறிவியலையும் தொடர்பு படுத்தும் கட்டுரை மிக தெளிவாக எழுதப்பட்ட கட்டுரை. கையெழுத்து தெளிவு. பத்தி பிரித்தல் தெளிவு. ஆனால் அதில் உண்மையில்லை. உண்மையில்லாததை அந்த மாணவி உண்மை போல எழுத முற்பட்டிருக்கும் அக்கறையின் பின்னால் இருக்கும் உளவியலை ஒரு சமூகநீதி ஆர்வலராக இவரால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
அந்த மாணவி சிறுவயதில் இருந்தே அவ்வாறு வளர்க்கப்பட்டிருக்கிறார். மதத்தை தாண்டி அவரால் யோசிக்க முடியவில்லை. அனைத்துமே மதத்தில் அடக்கம் என்று நம்பும் இளம் வயது மாணவியை பார்க்க இவருக்கு அயர்ச்சியாய் இருந்திருக்கிறது.
இந்த மதம்தான் பெண்ணாகிய உன்னை அடக்கிக் கொண்டிருக்கிறது எனபதை எல்லாம் அவளுக்கு சொல்லி புரிய வைக்கவே முடியாது என்று நினைத்து கொள்கிறார்.
இன்னொரு கட்டுரையில் நதிகளை சுத்தப்படுத்த பொதுமக்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தன்னால் எவ்வளவு ஆழமாக யோசிக்க முடியுமோ அவ்வளவு ஆழமாக யோசித்து முயற்சி செய்து எழுதப்பட்ட கட்டுரை.
அது முதல் கட்டுரை அளவுக்கு செம்மையாக இல்லாவிட்டாலும் உண்மையான அக்கறையில் எழுதப்பட்ட கட்டுரை.
ஐந்து நிமிடம் கூடுதல் நேரம் எடுத்து யோசித்து விட்டு முதல் பரிசை நதிநீர் சுத்தக் கட்டுரைக்கு கொடுத்து விட்டார். பல ஆசிரியரகளால் இதை நம்ப முடியவில்லை.
ஆனால் நடுவர் முடிவு செய்த பிறகு என்ன செய்ய முடியும்.
இங்கே கவனியுங்கள் சமூகநீதி அக்கறை உள்ளவர்கள் ஒரு அதிகாரத்தில் இருக்கும் போது அவர்களால் சமூகநீதி சார்ந்த முடிவுகளை எடுக்கமுடிகிறது.
இளங்கலை முடித்து, முதுகலை முடித்து, டாக்டரேட்டும் பெற்று ஒரு கல்லூரியில் ஆசிரியராக அமரும் போது, ஒரு அதிகாரத்தை கையில் பெறும் போது, பெற்ற பிறகு சமூக நீதி விழிப்போடு இருக்கும் போது அவரால் சமூகநீதி சார்ந்த சமூகத்துக்கு நன்மை விளைவிக்கும் முடிவுகளை எடுக்க முடிகிறது.
அதிகாரத்தை Max Weber என்ற ஜெர்மனிய சமூக விஞ்ஞானி மூன்றாக பிரிக்கிறார்.
1.பாரம்பரியமாக வரும் அதிகாரம் Traditional authority
ஆணாதிக்கம் ஒரு பாரம்பரிய அதிகாரம். வயதானவர்களை மதிக்க வேண்டும் என்பதும் ஒரு பாரம்பரிய அதிகாரம். நாட்டாமை பாதம் பட்டா பாடல் ஒரு பாரம்பரிய அதிகாரம். பண்ணையார்தனம் ஒரு பாரம்பரிய அதிகாரம். இந்தியாவில் இது சாதியை வைத்து வருகிறது. பொதுமக்கள் அளவில் இன்னமும் பலர் மேல் சாதியினரின் நீ நா ஒருமைக்கு அடங்கி விடுவதை பார்க்கிறோம்.
என்னுடையை சிறுவயதில் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் கன்னியாகுமரி நாடார்களை சகஜமாக ஒருமையில் பேசுவதை கேட்டிருக்கிறேன். இதை பல கன்னியாகுமரி ஏழை நாடார்கள் கேட்டும் கேட்காதது போல் போய்விடுவார்கள். அதே சமயம் திருநெல்வேலி தூத்துக்குடி பகுதியில் இருந்து வரும் நாடார்கள் இதை எதிர்த்தார்கள். இதில் யாரையும் நான் ஏற்றி இறக்கவில்லை. ஆனால் நான் பார்த்தது கேட்டது வைத்து உதாரணத்துக்கு சொல்லி இருக்கிறேன். இவை எல்லாம் இந்த பாரம்பரிய அதிகாரத்தில் வருகிறது. நம் நாட்டில் சாதிதான் கடந்த ஆயிரம் வருடம் பாரம்பரியம் என்பதால் இங்கே சாதியே பாரம்பரிய அதிகாரமாக இருக்கிறது.
2. ஈர்ப்பை வைத்து செய்யும்
அதிகாரம் Charismatic authority
ஒரு தலைவர் மக்களுக்கு தன் மேல் இருக்கும் ஈர்ப்பை வைத்து செய்யும் அதிகாரம்தான் ஈர்ப்பு அதிகாரமாகும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இதற்கு ஒர் உதாரணம்.
அதை விட சிறந்த உதாரணம் டாக்டர் கலைஞர் கருணாநிதி. எனக்கு திமுக பிடிக்காது ஆனால் கருணாநிதி பிடிக்கும் என்றே பலர் திமுக ஆர்வலராக இருப்பதை பார்த்திருக்கிறேன்.
இந்த Charismatic authority வருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. மக்கள் விரும்பும் விஷயத்தை செய்து அதன் மூலம் ஈர்ப்பை பெறும் சினிமா நடிகர்கள். மக்கள் விரும்பும் சமூக விஷயத்தை செய்து புகழ்பெறும் அரசியல்வாதிகள்.
முதலில் பார்த்த பாரம்பரிய அதிகாரத்துக்கும் இந்த ஈர்ப்பு அதிகாரத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இதற்கு உதயநிதி ஸ்டாலினின் திமுக பொறுப்பு ஒரு உதாரணம். திமுக தலைவரின் பேரன் என்ற பாரம்பரிய அதிகாரத்தை வைத்து அவருக்கு திமுக இளைஞரணி பதவி கிடைத்திருக்கிறது. இனிமேல் இதை வைத்து அவர் ஒரு ஈர்ப்பு தலைவராக உருவாகிவிடுவார்.
இதில்லாமல் கடுமையாக உழைத்து ரத்தமும் வியர்வையும் கொடுத்து Charismatic authority ஆன தலைவர்கள் பலர் உண்டு. டாக்டர் தொல்.திருமாவளவன் அதற்கொரு உதாரணம். திருமா தன்னுடையை நன்நோக்கான பார்வையில் ஒரு ஈர்ப்பான தலைவராக உருவாகி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
மேக்ஸ் வெபர் இந்த ஈர்ப்பு அதிகாரத்துக்கு அடுத்த தளத்தில் இருக்கும் தலைவர்கள் மிக அதிகாரம் செய்பவராக சொல்லி இருக்கிறார்.
இந்த ஈர்ப்பு அதிகாரம் நல்லமுறையில் செயல்பட்டால் நல்லது. தீய முறையில் செயல்பட்டால் அது கொடுமையானது என்கிறார் வெபர்.
உதாரணமாக ஜார்ஜ் புஷ் ஈராக் மீது போர் தொடுக்கும் போது இந்த ஈர்ப்பு அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டார்.
ஜார்ஜ் புஷ் மேல் ஈர்க்கப்பட்ட மக்கள் அவர் என்ன செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறார்கள். அவர் ஈராக் மீது போர் தொடுக்க வேண்டும் என்று நடத்தும் ஊர்வலத்தில் பெருந்திரள் கூட்டமாக குவிந்து போருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
அதில் கலந்து கொண்ட பெரும்பான்மையாக அமெரிக்கர்களுக்கு போர் அரசியல் எதுவும் தெரியாது. ஆனால் ஜார்ஜ் புஷ் சொல்லிவிட்டார் என்ற காரணத்துக்காகவே ஈராக் மீதான் போரை ஆதரித்தார்கள்.
நம் நாட்டில் கூட நம் பிரதமருக்கு ஒரு பெருந்திரளான வட இந்திய மக்கள் இந்த Charismatic authority கொடுத்திருக்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
3. அரசும் அரசு சார்ந்த அதிகாரம், மற்றும் சட்டப்பூர்வமான அதிகாரம்தான் Legal authority ஆகும்.
நீதிபதிகள், அரசியல்வாதிகள் ஆட்சியமைப்பது, காவல்துறையினர், அரசு அதிகாரிகள், பள்ளி கல்விதுறை அதிகாரிகள் எல்லாம்Legal authority ஆகும். அதிகாரத்தை மக்கள் அனுமதியுடன் முறையுடன் செய்வது Legal authority ஆகும்.
இந்தியாவில் Legal authority ஆவதற்கு ஒரு Traditional authority தேவை என்ற முறையை மிக தந்திரமாக பழைய மன்னர்களின் உதவியுடன் ஒரு குறிப்பிட்ட சாதியினர் ஏற்படுத்தி இருந்தனர். அதன்படி எல்லா சாதிக்கார்களும் Legal authority ஆக முடியாது.
குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே Legal authority ஆகிக் கொள்வார்கள். அவர்கள் Legal authority ஆன பிறகு அவர்களே ஈர்ப்பு அதிகார தலைவர்களை உருவாக்குவார்கள்.
இந்தியாவில் பல மேல் சாதி தலைவர்கள் ஈர்ப்பு அதிகாரமாக உருவாக்கப்பட்டது இந்த Legal authority ஐயை அந்த மேல் சாதியினர் கையில் வைத்து இருந்த காரணத்தினால்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் பாபா சாகேப் அம்பேத்கரின் வருகைக்கு பிறகு இந்த Legal authority அடைவதில் அனைத்து சாதியினருக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சரி இப்போது மூன்று அதிகாரங்களை மேக்ஸ் சொன்னதாக பார்த்தோம்.
1.பாரம்பரிய அதிகாரம், 2.ஈர்ப்பு அதிகாரம், 3.முறை அதிகாரம்
இந்தியாவில் பார்ப்பனர் அல்லாத சாதி இந்துவாய் பிறந்த ஒபிசிக்கள் இதில் எதை எதைல்லாம் அடையலாம் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
அவர்களால் இந்த முதல் இரண்டையும் அடைய முடியும். அதாவது பாரம்பரிய அதிகாரம் மற்றும் ஈர்ப்பு அதிகாரத்தை எளிதில் அடைய முடியும்.
நம் கிராமங்கள் அப்படித்தான் சாதிய சமூகத்தால் அமைப்பட்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் இருக்கும் மக்கள்தொகைக்கு ஏற்றால் போலவான முறை அதிகாரம் எனப்படும் Legal authority ஐ அவர்களால் பிடிக்க முடியவில்லை. அது பார்ப்பனர்கள் கைகளிலேயேதான் இன்னமும் இருக்கிறது.
இந்தியாவில் தலித்தாக பிறந்த பட்டியலினத்தவர் இந்த மூன்று அதிகாரத்தில் எதை எல்லாம் அடையமுடியும் யோசித்து பாருங்கள்.
பாரம்பரிய அதிகாரத்தை சாதிவெறி பிடித்த சமூகம் கொடுக்கவில்லை. இனிமேலும் கொடுக்க மாட்டேன் என்கிறது.பாரம்பரிய அதிகாரத்தை பிடிப்பதில் சிக்கல் இருப்பதாலேயே ஈர்ப்பு அதிகாரமும் கிட்டுவதில்லை.
ஈர்ப்பு அதிகாரம் கிட்ட வேண்டுமென்றால் அப்துல் கலாம் போல இங்கே பார்ப்பனிய தத்துவத்தை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய சாதிய சூழ்நிலைதான் இருக்கிறது.
ஆனால் தலித்தாக பிறந்தவரால், சாதி இந்துவாய் பிறந்தவரால் இந்த Legal authority ஐ அடைய முடியும்.
அதற்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்கிறது. இதைத்தான் அசுரன் திரைப்படத்தில் பெரியவர் கேரக்டரில் தனுஷ் படிப்பை எடுக்க முடியாது. படிச்சி அதிகாரத்துக்கு வரணும் என்கிறார்.
Legal authority ஐ புரிந்து கொண்ட அதே சமயம் அதை அடைய விடாமல் இந்த பார்ப்பன ஆதரவு சமூகம் எவ்வளவு தடை விதிக்கிறது என்பதையும் நாம் அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் முன்னேறிய பிசி, எஸ்.சி மக்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்று அடிக்கடி பலர் சொல்வதை கேட்கலாம். படிக்காத ஒரு பெற்றோருக்கு பிறந்த பிள்ளை படித்து பொறியாளராக ஆகி அவருடையை குழந்தையை நன்றாக படிக்க வைத்து 25 வயதில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக்கினால்தான் அந்த குழந்தையால் சர்வீஸ் அடிப்படையில் தமிழ்நாட்டில் தலைமை செயலாளராக உயர முடியும்.
அதைத்தடுக்கத்தான் படித்த பெற்றோருக்கு, வசதியான பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு கிடைக்ககூடாது என்கிற வாதம்.
நீ படித்து ஒரு மென்பொருள் பொறியாளராக சிடிஎஸ், இன்போசிஸ் போன்ற தனியார் துறையில் இருந்து சம்பாதிக்க வேண்டுமானால் செய். ஆனால் தலித்தாக 25 வயதில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆகவே கூடாது. ஆகி எங்கள் கைகளில் இருக்கும் பெரும் பொறுப்புகளை பறிக்கவே கூடாது என்பதுதான் இந்த வகையான படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்பதன் பின்னால் இருக்கும் அரசியல் ஆகும்.
ஒரு தலித் இளைஞரோ அல்லது ஒபிசி இளைஞரோ இந்த Legal authority பற்றிய விழிப்போடு இயங்கவேண்டிய அவசியம் இருக்கிறது.
ஆனால் நம்மூரில் கண்டதே கோலம் என்றுதான் பல இளைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பார்ப்பனர் அல்லாதவர் ஒரு கல்லூரியின் தலைமை பொறுப்பில் இருந்து கட்டுரைப்போட்டியில் நடுவராக இருப்பதினால் என்ன நடந்தது.
அவரால் அவர் அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு முடிவு எடுக்க முடிந்தது. அந்த முடிவு இன்னொரு மாணவி மேலுள்ள வெறுப்பினால் எடுக்கப்பட்டதா?
இல்லை.
அது சமூகம் மேலுள்ள அக்கறையினால் எடுக்கப்பட்டது.
மதமும் அறிவியலும் எப்படி ஒன்றாகும். அது ஒன்றாக வாய்ப்பே இல்லை என்பதை இளைஞர்களுக்கு புரிய வைக்க எடுக்கப்பட்ட முடிவு அது. இந்த மாதிரி டாப்பிக்கை ஒரு கல்லூரி மாணவர் தேர்ந்தெடுத்தால் அவருக்கு பரிசு கிடைக்காது என்ற சமூகநீதியை உலகுக்கு உரக்க சொல்லும் முடிவு அது.
இதனால்தான் இந்த Legal authority ஐ ஒடுக்கப்பட்டவர்கள் கைப்பற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.
கைப்பற்றுவதோடு நில்லாமல் அங்கிருந்து தனிநபர் வெறுப்பு விருப்பு இல்லாமல் சமூகநீதிக்காக இயங்க வேண்டும்.
நீங்கள் இந்த பத்தியை படித்த பிறகு உங்கள் வீட்டு சிறார்களிடம் மேக்ஸ் வெபர் சொன்ன மூன்று அதிகாரங்களையும் சொல்லுங்கள்.
இந்த உலகில் எந்த விதமான அதிகாரத்தை அவர்கள் பார்த்தாலும் அது இந்த மூன்று வகையில் எதில் வருகிறது என்று தரம் பிரிக்க சொல்லிக் கொடுங்கள்.
அதில்லாமல் ஏன் Legal authority ஐ கைப்பற்ற வேண்டும் என்றும் சொல்லிக் கொடுங்கள்.
Legal authority ஐ கைப்பற்றுவதுதான் முறையான சமூக வளர்ச்சி என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.
ஒரு சமத்துவமான சமூகம் உருவாக இதை எல்லாம் செய்துதான் ஆக வேண்டும்.
Tags:
Social Justice