Happy Nurses Day

*************

ஏன் மூஞ்ச காட்டுற நர்சம்மா;

            ஐந்தறிவு எறும்பு கூட வரிசையில் செல்லும், ஆனால் மூச்சு விட இடமின்றி அடைத்து நின்று உடனே ஊசி போடு என்பவரை வரிசையில் நிற்க சொன்னால் கேட்பார் , ஏன் மூஞ்ச காட்டுற நர்சம்மா ?

            நோயுற்றவரை காண, கறிவிருந்துக்கு வந்த கூட்டம் போல மணிகணக்கில் கட்டிலை சுற்றி அமர்பவரை வெளியேற சொன்னால் கேட்பார்,ஏன் மூஞ்ச காட்டுற நர்சம்மா ?

பிறந்த குழந்தைக்கு தாய்பால் தவிர எதுவும் தரகூடாது என தொண்டைகிழிய சொன்னாலும்.  கட்டில் மறைவிலே சக்கரை தண்ணி, கழுதைபால் ஊற்றி பிள்ளைக்கு மூச்சுதிணறல் என வந்து நிற்பவர் கேட்பார், ஏன் மூஞ்ச காட்டுற நர்சம்மா ?

ஒரு வாரமாய் காய்ச்சல் என்று நள்ளிரவு 2மணிக்கு வந்து ரவுண்ஸ் சென்ற  மருத்துவரை உடனே கூப்பிடு  என்று கட்டபொம்மன்  போல வசனம் பேசிவிட்டு மருத்துவரை கண்டதும் கட்ட பொம்மை போல நிற்பவர் கேட்பார்,  ஏன் மூஞ்ச காட்டுற நர்சம்மா?

தன் விட்டு பெண்கள் இரவில் வெளியே செல்லகூடாது  என்பவரில் சிலர் கூட்டமாக தண்ணிய போட்டுவிட்டு போதைமயக்கத்தில் விழுந்து எழுந்து கிராமத்து மருத்துவமனை செவிலியரை கேலி கிண்டல் செய்பவன் கேட்பான், ஏன் மூஞ்ச காட்டுற நர்சம்மா?

உள்நோயாளி பிரிவில் 80 நேயாளிக்கு ஒரு செவிலியர் என பம்பரமாய் சுழன்று ஊசி போட்டு. மாத்திரை கொடுத்து குளுக்கோஸ் ஏற்றி. Lab. X-ray. Ecg. CT scan. Usg scan . Operation room,  சிறப்பு மருத்துவர் opinion  என நோயாளிகளை பிரித்து அணுப்பி அதன் ரிசல்டுகளை மருத்துவருக்கு சொல்லி. புதிய நோயாளிகள் படுக்கைகக்கு சேர்த்து.  குணம் கண்டவரை டிஸ்சார்ஜ் செய்து 5 நிமிடம் அமரும் போது. உனக்கு உட்கார தான் அரசு சம்பளமா என்பவர் கேட்பார், ஏன் மூஞ்ச காட்டுற நர்சம்மா ?

மருத்துவமனையில் நிர்வாகதுறை இருந்த போதிலும் செவிலியரிடம் என் Fan வேகமாக சுழலவில்லை. ஏன் Light வெளிச்சம் அதிகம் வரவில்லை. ஏன் சாம்பாரில் காய்கறிகள் அதிகம் இல்லை. ஏன் போதிய நாற்காலிகள் இல்லை.  ஏன் படுக்கைகள் நோயாளிகளுக்கு ஏற்ப அதிகரிக்கவில்லை என High court lawyer போல அடுக்குபவர் கேட்பார்,  ஏன் மூஞ்ச காட்டுற நர்சம்மா ?

(உரிமைகளை கேட்க வேண்டிய இடத்தில் கேட்டு பெறவேண்டும்)

பல்லாயிர கணக்காண செவிலியர்களில்,  30% சதவித செவிலியர்கள் 7000Rs மாத சம்பளம் என தினகூலியாக வாழும் போது உனக்கென்ன 30000Rs சம்பளம் என்பவர்  கேட்பார், ஏன் மூஞ்ச காட்டுற நர்சம்மா ?

யாரிடம் தான் இவர்களின் புன்னகையை காண்பது?

நோயுற்று நலம் காணும் மனிதர்களை கேட்டுபார்.

பிரசவவலியில் துடிதுடித்து ஈன்ற குழந்தையை தனக்கு துணை நின்ற செவிலியர் கையில் இருத்து பெற்று கொள்ளும் தாய்மார்களை கேட்டுபார்.

அறியாமல் நஞ்சை உட்கொண்ட சாகும் உயிர் வாழ துடிக்கும் போது தாங்கி பிடித்து கொடுத்தோம். குணம் கண்டவரை கேட்டுபார்.

சாலை விபத்தில் இரத்த வெள்ளத்தில் மிதந்து திவிர சிகிச்சையில் மீண்டு வீடு செல்பவரை கேட்டுபார்.

பெற்றபிள்ளைகளே எள்ளி நகையாயுடி,  செவிலியர் ஆறுதல் வார்த்தைகள் பெரும் தாள்ளாடும் வயதினரை கேட்டுபார்.

பொதுஇடத்தில் ஒருவர் தும்மலை சகித்து கொள்ளாத சக மனிதர்கள் இடையில் உமிழ்நீர், சீறுநீர், வியர்வை, இரத்தம்  என அனைத்தையும் கையாளும் செவிலியரை பற்றி நோயுற்றவரை கேட்டுபார்.

எமனை வெற்றவர் எவரும் இல்லை ஆனால் இந்த உமன் தங்கள் சேவை எனும் ஆயுதத்தை மருத்துவர் துணை கொண்டால் அந்த எமனையும் வென்றுவிடுவார்.

நீங்கள் எல்லாரும் நல்லவர்களா என்று கேட்கின்றிர்களா, இல்லவே இல்லை.

எங்களில் கையூட்டு களவானிகள் சிலர் உண்டு, வேடந்தாங்களுக்கு சீசனுக்கு வந்த பறவை போல மருத்துவமனையை சுற்றும் சிலர் உண்டு. நகமும் சதையும் போல நாற்காலியும் தானும் என தஞ்சம் அடையும் சிலர் உண்டு. ஆனால் இந்த அற்பங்கள் எல்லாம் மிகமிக சொற்பமே. விரைவில் இவையும் மாறும்.

"தன்னை போல் பிறரை நேசி " எனும் வாக்கியத்தை வாழ்நாளாகி வாழும் என்னுயிர் செவிலியர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

இனிய செவிலியர் தினம் ( 12-5-18) நல்வாழ்த்துகள்.

வினோத் கண்ணன்

Post a Comment

Previous Post Next Post