Maternity Leave and Poverty of Nurses

தாய்ப் பால் வார விழா..... ( சிறுகதை..)

“இந்த மாசமும் உம் புருஷன் பணம் அனுப்பல போல. போன மாசமே வண்டி டியூ கட்டலைன்னு எவன் எவனோ போணுல பேசினான். மொதோ உம் புருசனுக்கு போனை போட்டு பணத்தை அனுப்ப சொல்லு...’’

காலையிலேயே தன் புலம்பலை தொடங்கியிருந்த தாய்க்கு பதில் சொல்ல முடியாமல், கட்டிலில் இருந்த குட்டிப் பஞ்சு மெத்தையில் சுகமாய்ப் படுத்துக் கொண்டு, பஞ்சுப் பொதிப் பாதங்களால் தன்னை உதைத்துக் கொண்டிருந்த மகளை வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ரேவதி.

ரேவதிக்கு குழந்தை பிறந்து 4 மாதங்களே முடிந்திருந்தன. அரசின் தொகுப்பூதிய திட்டத்தில் பணி புரியும் செவிலி. மற்ற பெண் அரசாங்க ஊழியர்கள் போல ஆறு மாத சம்பள விடுப்பு இவர்களுக்கு கிடையாது.

அரசு மருத்துவமனையில், பணி புரிந்துக் கொண்டிருந்தாலும், மாப்பிள்ளை வீட்டார் முன் இறங்கிப் போக முடியாமல், தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்த்திருந்தார்கள். சிசேரியன் பிரசவம் வேறு.

அதோடு குழந்தைக்கு பேர் வைக்கும் வைபவம், குழந்தைக்கு சீர் என்று தொடர்ச்சியாய் செலவு கையைக் கடிக்க, நடுத்தரத்திற்கும் சற்றே கீழ் இருந்தக் குடும்பம் செலவுகளை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்றது.

இந்த சூழ்நிலையில் ரேவதியின் கணவன், அசோக் வேறு சென்னையில் பணிபுரிபவன், இவர்கள் முன் பணம் கட்டி சீராய் வாங்கிக் கொடுத்திருந்த வண்டிக்கு, மாதச் சந்தாவை கூட ஒழுங்காய்க் கட்டாமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்தான்.

கணவன் மேல் தான் தவறு என்றாலும், மற்ற சராசரிப் பெண்களைப் போல, பெற்ற தாயே என்றாலும், பிறர் சுட்டிக் காட்டும் போது, முணுக்கென்ற வலி உள்ளே குத்தத் தான் செய்தது.

ஒவ்வொரு வேலை உணவைப் பரிமாறும் போதும், “பருப்பு தீந்துப் போச்சி... பால் பாக்கி கொடுக்கணும்.... தக்காளி கிலோ 40 ரூபாய்க்கு விக்கிது...’’ தாயின் சாதாரண புலம்பல்கள் கூட உணவைத் தொண்டைக் குழியிலேயே விக்க வைத்தது.

அவரைச் சொல்லியும் குத்தமில்லை. தையல் தொழில் புரியும் கணவனின் வருமானம் கொண்டு வீட்டில் நான்கு பேர் வயிற்றுப் பிழைப்பை சமாளிப்பது என்பது சாமனிய வேலை அல்லவே.

வளைக்காப்பு முடித்து வீட்டிற்கு வந்த நாள் முதல், பிரசவ வலி தொடங்கும் நாள் வரை தொடர்ந்து ரேவதியும் வேலைக்கு சென்றாள். அந்த வருமானம் ஓரளவு அந்த நேரத்தில் கை கொடுத்தது.

தற்சமயம் பிரசவத்திற்கு வாங்கிய கடனும் சேர்ந்து ஒற்றை ஆள் வருமானமும் குறைந்து, நிலமை மேலும் சிக்கலாகி இருந்தது.

குழந்தையின் சிணுங்கல் ரேவதியை நடப்பிற்கு திருப்பியது. துணியை ஈரம் செய்துவிட்டு சிணுங்கிக் கொண்டிருந்தவளை மெதுவாய் தூக்கி உலர்ந்த துணிக்கு மாற்றியதும், வாகாய் அணைத்துப் பால் கொடுக்க குழந்தை தாயின் கத கதப்பில் மென்மையாய் அடங்கியது.

அந்த நேரத்தில் ரேவதியின் மனம் பூரண அமைதியை தத்தெடுத்தது. தன்னிடம் பசியாறும் குழந்தையை லயித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம் அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் பற்றியும் சிந்திக்க தொடங்கியது.

பால் குடித்தபடி தூங்கியிருந்த குழந்தையை தூளியில் இட்டவள், தன் மூத்த செவிலியரை அலைபேசியில் அழைத்தாள். “ சிஸ்டர்... நான் ரேவதி பேசுறேன்..’’ இவள் குரல் கேட்டதும் ஆள் பற்றாக் குறையில் விழி பிதுங்கிக் கொண்டிருந்த அந்த மூத்த செவிலியருக்கு ஏதோ அமுத கானம் காதில் ஒலித்ததைப் போல இருந்திருக்க வேண்டும்.

“ சொல்லு ரேவதி... நீ எப்படி இருக்க.. பாப்பா எப்படி இருக்கா... அப்புறம் எப்ப வந்து டியூட்டி ஜாயின் பண்ணப் போற....’’ அவர் அப்படிக் கேட்டதும், “அடுத்த மாசம் ஜாயின் பண்ணலாம்னு பாக்குறேன்... பாப்பாக்கு என் பால் தவிர மேல் பால் பழக்கலை சிஸ்டர்... அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு....’’

அவளின் தயக்கத்தை நொடியில் உணர்த்துக் கொண்டவர், “என்ன ரேவு இப்படி பேசுற... உன் வீட்டு சூழ்நிலை எனக்கு தெரியாத.... நாம எல்லாம் எப்ப இருந்தாலும் குழந்தைய பிரிஞ்சி வேலைக்கு வந்து தானே ஆகணும்.

இப்போனா வேற பால் கொடுத்தாப் பழகிப்பா... இன்னும் ரெண்டு மாசம் போச்சு... உன் முகத்தை நல்லா அடையாளம் கண்டு வச்சி கிட்டு வேற யார்கிட்டையும் அப்புறம் ஒட்டாம போயிடும். 

நான் வேணா நம்ம மேடத்துகிட்ட பேசி உனக்கு காலையில ஷிப்ட் மட்டும் ஒரு ரெண்டு மாசத்துக்கு வாங்கிக் கொடுக்குறேன். இப்போதைக்கு நீ நைட் டூட்டி பாக்க வேண்டாம் என்ன சொல்ற....’’ அவர் அப்படி சொல்லியதும், ரேவதியின் சூழல் அவளை தானாக “சரி சிஸ்டர்...’’ சொல்ல வைத்தது.

அம்மாவிடம் இன்னும் பத்து நாளில் வேலைக்கு போகப் போவதை அறிவித்ததும் அவர் முகத்தில் ஓர் நொடி நிம்மதி தடம் பதித்தாலும், அடுத்த நொடி, “பிள்ளைக்கு பாலு’’ என அவரும் கலங்கவே செய்தார்.

ரேவதி தான் படித்து வந்த வழியில், “ நான் பாலை எடுத்து வச்சிட்டு கிளம்பறதுக்கு முன்ன பால் கொடுத்துட்டு போறேன். நான் வர வரைக்கும் நீ சமாளி....’’ இவள் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த ரேவதியின் பாட்டி,

“அடக் கருமமே.... தாய்ப் பாலை எல்லாமா பீசி வைப்பாங்க... எங்க காலத்துல எல்லாம் எங்க கிட்ட மார்ப் பால் எவ்ளோ இருந்தாலும் பசும் பால் தான் கொடுப்போம். அது தான் பிள்ளைங்களுக்கு சக்தி. நம்ம பால் வெறும் தண்ணியாவுள்ள இருக்கும். பிள்ளைக்கு பசி கூட காட்டாது. நானெல்லாம் ஏழு பிள்ளைங்களை அப்படி தானே வளத்தேன்.’’

அவளின் பாட்டி லட்சுமி தன் பாட்டில் பேசிக் கொண்டிருக்க, “அதான் ஒன்னு கூட படிச்சி உருப்படல....’’ ரேவதி மனதிற்குள் பாட்டியை திட்டி தீர்த்தாள். ரேவதியின் எண்ணம் புரிந்தார் போல, அவள் தாய்,

“அம்மா நீ கொஞ்சம் சும்மா இரு. இப்போ டாக்டருங்க எல்லாம் குழந்தைக்கு மொதோ ஆறு மாசம் தண்ணிக் கூட வேண்டாம். தாய்ப் பாலே போதும்னு சொல்றாங்க...அவங்க சொல்றதைக் கேட்காம நாமளா ஒன்னு பண்ணப் போயி எதாச்சும் ஏடா கூடமா ஆயிப் போச்சு...

எம் மகளைக் கூட சமாளிக்கலாம் ஆளானப்பட்ட சீமைத் துறை எம் மருமகன் வாய் சவடாலுக்கு பதில் சொல்ல முடியாது....நான் எல்லாம் எம் மகளுக்கு மூணு வருஷம் தாய்ப் பால் கொடுத்தேன்.

என்ன குறைஞ்சி போயிட்டா நல்லா படிச்சி இதோ இன்னைக்கு கவர்மன்ட் உத்தியோகத்துல இருக்கா... என்ன  சனியன் சம்பளம் தான் கம்மியா போச்சு. ஹும் ரெகுலர் ஆனா அதுவும் நிறைய தருவாங்களாம். அது தான் எப்ப ஆகுமோ தெரியல. நீ உக்காரு நான் போய் உனக்கு காபி போடுறேன்.’’

ரேவதியின் தாய் கனகம் அலுப்போடு சமையலறைக்குள் நுழைய, “ஹும் நல்லது சொன்ன யார் கேக்க போறீங்க...’’ என்றபடி லட்சுமி அங்கே இருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தார்.

தொகுப்பூதியம் என்ற பெயரில் நடக்கும் உழைப்பு சுரண்டலை எண்ணி மனம் நொந்தபடி ரேவதி முற்றத்தில் இருந்த துணிகளை துவைக்க போனாள்.

பத்து நாட்கள் நொடிகளாய் கடந்து மறைய ரேவதி வேலைக்கு செல்ல வேண்டிய நாளும் வந்தது. காலையில் வெண்ணீரில் குளித்து முடித்த அலுப்பில் சுகமாய் உறங்கிக் கொண்டிருந்த மகளை வலுக்கட்டாய படுத்தி பால் கொடுக்க தொடங்கினாள். இரண்டு முறை தள்ளி விட்ட குழந்தை மூன்றாம் முறை உறக்கம் கெட்ட எரிச்சலில் வீரிட்டு அழத் தொடங்கியது.

குழந்தையை ரேவதியிடமிருந்து வாங்கிய கனகம், “இனி குழந்தையை நீ கிளம்புனதும் குளிக்க வைக்குறேன் ரேவதி. இப்போ பாலை மட்டும் பீசி வச்சிட்டு நீ கிளம்பு.’’

தூளியில் இட்டதும், சுகமாய் தன் தூக்கத்தை தொடரும் மகளையே பார்த்தபடி ரேவதி தன் தனி அறைக்கு சென்றாள். அவள் படித்த படியே சுத்தம் செய்து வெண்ணீரில் கொதிக்க வைத்த ஆறு சிறிய சிறிய சில்வர் கப்புகள் அணிவகுத்து அமர்ந்து இருந்தன.

காலையில் இருந்தே சிறுக சிறுக பால் எடுத்து வைக்காத தன் மட தனத்தை எண்ணி தன்னைத் தானே தலையில் கொட்டிக் கொண்டாள். முதலில் ஒரு கப்பை கையில் எடுத்தவள், தன் புத்தக அறிவு சொல்லிக்  கொடுத்த படி, இரு மார்புகளையும் சுழற்சி முறையில் மசாஜ் செய்து மார்பில் சுரந்து இருக்கும் பாலை ஒரு புள்ளியில் குவிக்க தொடங்கினாள்.

அடிப்புறம், மேல் புறம் ஒரு வழியாய் மார்பை அழுத்த முதலில் கொஞ்சமாய் வெளி வந்த பால், அடுத்த ஐந்து நொடியில் கொஞ்சமே கொஞ்சம் அதிகமாய் வர தொடங்கியது.

இரு மார்புகளிலும் கிட்ட தட்ட அரைமணி நேரம் போராடி சேகரித்தும், ஒரு சில்வர் கப் கூட நிராம்பாமல் அந்த வெள்ளை திரவம் அவளுக்கு வேடிக்கை காட்டியது. அழுத்தத்தை கூட்ட கூட்ட  மார்பு வழி வேறு ஆளைக் கொன்றது.

இதற்கு மேல் செய்வதற்கு ஒன்றும் இல்லை என அவள் சோர்ந்து நின்ற சமயம், கனகம் அறைக்குள் நுழைந்தார். கப்பில் இருந்த பாலைக் கண்டவரின் முகம் அதிர்சியைக் காட்டியது.

“இந்த பால் எப்படி ரேவதி குழந்தைக்கு பத்தும்.’’ அவர் அப்படிக் கேட்டதும், ரேவதியின் முகமும் கலக்கத்தை காட்டியது. “அதான்மா... எனக்கும் பயமா இருக்கு..’’

மகள் கலங்குவதைக் கண்டதும், “பிள்ள வாய் வச்சி குடிக்க குடிக்க தானே ரேவதி பால் ஊறும் வெறுமனே பீச்சினா பால் இவ்ளோ தான் வரும். சரி நீ கிளம்பு. நான் பாத்துக்கிறேன்...’’

அம்மா கொடுத்த தைரிய வார்த்தைகளில் ரேவதி கொஞ்சம் திடமாய் கிளம்பினாலும் உள்ளுக்குள் ஒரு தவிப்பு ஓடிக் கொண்டே இருந்தது.

முதல் நாளே அரைமணி நேரம் தாமதமாய் வந்தவளை மூத்த செவிலியர் எதிர்க் கொண்டார். அவளைக் கண்டதும் முகம் மலர, “வா ரேவதி... நல்ல வேளை வந்த.... இந்த மாசம் மொதோ வாரம் தாய்ப்பால் வாரமாம்...

அதனால பீடிங் கார்னர் ரெடி பண்ண சொல்லி ஏதேதோ இன்ஸ்ட்ரக்சன் எல்லாம் மெயில் பண்ணி விட்ருக்காங்க.... இந்த மாதிரி வேலையை எல்லாம் நீ தான் சரியா செய்வ ரேவு... கொஞ்சம் நீ அந்த வேலையை மட்டும் கவனி ரேவு... மீதி எல்லா வேலையையும் நான் பாத்துக்கிறேன்....’’

அவர் அப்படி சொன்னதும் ரேவதி தங்கள் கணினி அறை நோக்கி நடந்தாள். அவள் தற்சமயம் வேலை பார்ப்பது ஒரு கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில்.

ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஏழு நாட்கள் தாய்ப் பால் வாரா விழாவாக கொண்டாடப்படுகிறது. ரேவதி தன் கல்லூரி நாட்களில் அந்த ஏழு நாட்களும், நாடகத்தின் மூலமும், வில்லுப் பாட்டு மூலமும், இன்னும் பிற கலை நிகழ்சிகள் மூலமும் தாய்ப் பாலின் அவசியத்தை இளம் தாய்மார்களுக்கு உணர்த்தியதை எண்ணி வேதனையோடு மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.

தாய் பால் வார விழாவிற்கான அறையை அடுத்த இரண்டு மணி நேரத்தில் தயார்படுத்தி முடித்தவள், கிராமப் புற செவிலியர்கள் அழைத்து வந்து இருந்த இளம் தாய்மார்களுக்கு முறையான தாய் பாலூட்டும் முறையை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு முறை அங்கிருந்த இளம் சிசுக்கள் அழுகையில் சிணுங்கும் போதும் இவள் மார்பு பூரித்து பெருக தொடங்கியது. இவள் பணியில் இருக்கும் பொழுதே உயரதிகாரி விழா ஏற்பாட்டை பார்வையிட வந்தார்.

இவர்கள் சிறப்பாய் பணி செய்த விதத்தை பாரட்டி, அதை பதிவேட்டிலும் எழுதி வைத்து செல்ல, மூத்த செவிலியருக்கும், மருத்துவருக்கும் அதில் மிகப் பெரிய சந்தோசம்.

“அதான் நீ வேணும்கிறது ரேவு...’’ இருவரின் பாராட்டிலும் மனம் குளிர்ந்தாலும், குழந்தையின் பசியாற்ற முடியாத ஏக்கம் மார்பை மேலும் கனமாக்கியது.

நேரம் செல்ல செல்ல சொல்ல முடியாத வலி. அணிந்திருக்கும் வெள்ளை சீருடை நனையப் போகும் அபாயம் இருப்பதை உணர்தவள் வழக்கமாய் தாங்கள் உபயோகிக்கும் கழிவறை நோக்கி ஓடினாள்.

புடவை என்றாலும் கொஞ்சம் இலகுவாய் இருந்திருக்குமே என்று நொந்த படி, பொறுமையாய் பின்ன பார்ம் உடையில் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாய் விலக்கி மார்பில் கை வைத்தது தான் தாமதம், அணை உடைந்த புது வெள்ளம் போல,

அந்த வெள்ளை திரவம் அந்த கழிவறை தரை முழுக்க பரவத் தொடங்கியது. அதே நேரம் வீட்டில் இருந்த குழந்தை வழக்கம் இல்லாத வழக்கமாய் சங்கடையில் கொடுத்த பாலை வீறிட்டு அழுது, வாந்தி செய்துவிட்டு அம்மாவின் தாய்ப் பாலிற்க்காய் ஏங்கி ஏங்கி அழுதுக் கொண்டிருந்தது.

இரண்டு மார்பிலும் வலி சற்று மட்டுப்படவே, ரேவதி சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு உடைகளை சரி செய்துக் கொண்டாள். அதற்குள் கழிவறைக் கதவை யாரோ தட்டினார்கள்.

அப்பொழுது தான் கழிவறையை குனிந்து பார்த்த ரேவதி அங்கே ஒரு மூலையில் இருந்த பினாயிலை எடுத்து கொஞ்சம் தெளித்து தண்ணீர் ஊற்றி அங்கிருந்த பால் வாடையோடு சேர்ந்து தன் மனவலியையும் கழுவ முயன்றாள்.

அன்றைய பணி முடிந்து வீட்டிற்கு கிளம்ப சரியாய் நான்கு மணியாகிவிட்டது. குழந்தையை பிரிந்து சரியாய் ஒன்பது மணி நேரமாகி இருந்தது.

ஷெட்டில் இருந்த வண்டியை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி விரைந்தாள். வீட்டை நோக்கி செல்ல செல்ல, மீண்டும் மார்பு கனக்க தொடங்கியது குழந்தையின் நினைவில்.

வண்டியை  வாயில் நிறுத்திவிட்டு வீடு நோக்கி விரைந்தவளை, பூட்டிய வீடே வரவேற்றது. பக்கத்துக்கு வீட்டு அக்கா எட்டி பார்த்து, “ரேவதி.... பாப்பா காலைல இருந்து அழுதுக்கிட்டே இருந்தாளா உங்க பாட்டி வந்து ஏதோ கை வைத்தியம் சொல்லிட்டு போச்சுன்னு உங்க அம்மா விளக்கெண்ணெய் காய்ச்சி பிள்ளைக்கு வெறும் வயித்துல ஊத்தி இருக்கு... பிள்ளை வாந்தியும் மயக்கமுமா துவண்டு போக பயந்து போய் இப்ப தான் நம்ம கணேசன் டாக்டர்கிட்ட கூடிட்டு போய் இருக்கு..’’

அந்த அக்காள் விவரம் சொல்ல சொல்ல, “ஐயோ...பொம்மிமா...’’ என்று குழந்தையை எண்ணிக் கதறியவள், மீண்டும் வண்டியை எடுத்துக் கொண்டு வழக்கமாய் குழந்தையை காட்டும், மருத்துவரின் இருப்பிடத்தை நோக்கி விரைந்தாள்.

இவள் உள்ளே நுழைந்து குழந்தையின் பெயரை சொல்லி, அவளை அனுமதித்து இருந்த அறையை நோக்கி ஓடவும், அதே நேரம் சரியாய் மருத்துவர் குழந்தையை பரிசோதித்து முடித்து வெளியே வந்துக் கொண்டிருந்தார்.

இவளைக் கண்டவுடன், முகத்தில் கண்டிப்பை தேக்கியவர், “ நீங்க எல்லாம் என்னம்மா ஸ்டாப்... குழந்தைக்கு தாய்ப் பால் தவிர எதுவும் தரக் கூடாதுன்னு தெரியாது.... படிச்ச நீங்களே இப்படி இருந்தா.... ஏதோ எண்ணெய் எல்லாம் கொடுத்து... பேபி ஹைபோ ஒலிமிக் ஷாக் போயிட்டா... ப்ளூயிட் எல்லாம் போட்டு இப்பதான் கொஞ்சம் நார்மல்க்கு வந்து இருக்கா...

ஸ்டொமக் வாஷ் அட்வைஸ் பண்ணி இருக்கேன். இன்னும் ரெண்டு நாள் நில் ஓரல் தான். ட்ரிப்ஸ் அட்வைஸ் பண்ணி இருக்கேன். பாத்து இனியாவது பேபியை கேர்புல்லா வச்சிக்கோங்க....’’
திட்டி முடித்தவர் அங்கிருந்து விலக, அடிவயிற்றில் தீப் பிடித்த உணர்வோடு குழந்தை அனுமதிக்கப்பட்டு இருந்த அறையை நோக்கி ஓடினாள். கையில் இருந்த வென்ப்லான் ஊசி பெரிதாய் கட்டைப் போல கையில் பிணைக்கப்பட்டிருக்க, அதன் வழியே குளுகோஸ் சொட்டு சொட்டாய் இறங்கிக் கொண்டிருந்தது.

குழந்தை அந்த நிலையிலும் மெதுவாய் வலியில் விசும்பிக் கொண்டிருந்தது. ரேவதி மெதுவாய் குழந்தையின் அருகில் சென்றாள். குழந்தையின் விசும்பல், “ங்கா....ங்கா...’’ என்று வழக்கமாய் பால் தர சொல்லிக் கேட்கும் பிரத்யேக மொழியாய் அவள் காதில் ஒலிக்க,

ரேவதியின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது. அதுவரை இறுகி இருந்த மார்பும், இதோ நானும் கண்ணீர் வடிக்கிறேன் என மனதின் கண்ணீராய் கீழ் இறங்கி அவள் மார்பு சேலையை நினைக்க துவங்கியது.

அந்த அறையின் முகப்பில் ஒட்டப்பட்டிருந்த தாய்ப் பால் வார விழாவிற்கான போஸ்டர் அந்தக் காட்சியைக் கண்டு பொங்கி எழுவதைப் போல காற்றில் இங்கும் அங்கும் பறந்து பறந்து சுவற்றோடு மோதிக் கொண்டிருந்தது லட்சக் கணக்கான தாய்மார்களின் பிரதிநிதியாய்.

பின் குறிப்பு : தாய் பால் தர வேண்டிய அவசியத்தை அறிந்தும், அறியாமலும் பொருளாதார சூழல் காரணமாக பாலூட்டும் குழந்தையை பிரிந்து பணிக்கு செல்லும் தாய்மார்களுக்கு சமர்ப்பணம்.

அரசோடு ( தொகுப்பூதியம்) தனியார் நிறுவனமும், குறைந்தது   ஆறு (9) மாத கால ஊதியத்தோடு கூடிய பிரசவகால விடுப்பை குழந்தை பெற்ற பெண்களுக்கு வழங்க வேண்டும் என்பது என் எளிய வேண்டுகோள்.
நன்றி...!

-------------
மேக்னாசுரேஷ்
-------------

CMR Manimozhiyan அவர்களின் Facebook பதிவிலிருந்து
with small input


2 Comments

Previous Post Next Post