ராஜஸ்தான் மாநிலம் எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நர்ஸ் பணியிடங்களுக்கு 615 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக 'எய்ம்ஸ் (AI-I-MS) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள், கல்லூரிகள், ஆய்வு மையங்கள் செயல்படுகின்றன. தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நர்ஸ் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 615 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் 'அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டென்ட்' பணிக்கு 15 பேரும், ஸ்டாப் நர்ஸ் (கிரேடு-1) பணிக்கு 50 பேரும், ஸ்டாப் நர்ஸ் (கிரேடு-2) பணிக்கு 550 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் கீழே தரப்படுகிறது...
வயது வரம்பு:
'அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டென்ட்' மற்றும் 'ஸ்டாப் நர்ஸ் (கிரேடு-1)' பணிகளுக்கு 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 'ஸ்டாப் நர்ஸ் கிரேடு-2' பணிக்கு 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். முன்னாள் படைவீரர்கள், மத்திய அரசு ஊழியர்கள் போன்றவர்களுக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
பி.எஸ்.சி. நர்சிங் 4 ஆண்டு பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியுடன் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து வைத்திருப்பவர்கள் அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டென்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். எம்.எஸ்சி.நர்சிங் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதே கல்வித்தகுதியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் கிரேடு-1 நர்சிங் பணிக்கும், பணி அனுபவம் இல்லாதவர்கள், கணினி இயக்கத் தெரிந்தவர்கள் கிரேடு-2 நர்சிங் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இந்த கட்டணத்தை இணையதளம் வழியாக மட்டுமே அனுப்ப முடியும். நெட் பேங்கிங், டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு முறையில் கட்டணம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும். இதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பித்ததும், கட்டணம் செலுத்த வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். அதை அனுப்பத் தேவையில்லை.
இதற்கான அறிவிப்பு அக்டோபர் 10-16 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமாகி உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை அந்த இதழிலோ, www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்திலோ பார்க்கலாம்.