தாய்மைக்கு நிகரானது மகப்பேறின் போது உடனிருக்கும் மருத்துவப் பணியாளர்களின் சேவை. கருவறையின் கதகதப்பில் இருக்கும் குழந்தையின் வெளியுலகப் பிரவேசத்துக்காக ஒரு தாய்க்கு உறுதுணையாக இருக்கும் அந்தச் சேவையை 27 ஆண்டுகளாகச் செய்துவருகிறார் செவிலியர் சுசீலா. கிராமங்களில் சேவை புரியும் பலரும் பணியிட மாறுதல் வாங்கிக் கொண்டு நகரங்களுக்குக் குடிபெயர்ந்துவிடுவார்கள். ஆனால் மாநிலத் தலைநகரான சென்னையில் பணிபுரிந்த சுசீலா, கிராமப்புறப் பணியை விரும்பி ஏற்று, சேலம் மாவட்டம் தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இதுவரை கிட்டத்தட்ட ஐந்தாயிரம் உயிர்களை உலகுக்கு அறிமுகம் செய்ய உதவிய அற்புத பணியைச் செய்திருக்கும் செவிலியர் சுசீலா, “பெண் சிசுகொலை இல்லாத நாள்தான் பெண்களுக்கான நாளாக மலரும்” என்கிறார். எங்கேயும் எப்போதும் ஆண், பெண் பேதம் நிலைத்திருக்கும் இந்த உலகில் பெண்களுக்கான முக்கியத்துவம் மகத்தானது என்று சொல்லும் சுசீலா, பெண்கள் நினைத்தால் ஆணாதிக்கத்தைத் தவிடுபொடியாக்கிவிட முடியும் என்று நம்பிக்கை தருகிறார்.
பெண்ணே மகத்தான சக்தி
“அனைத்து உறவுகளும் பெண்ணில் இருந்தே உருவாவதை யாராலும் மறுக்க முடியாது. இங்கு ஆதிக்கம் என்ற வார்த்தையை அன்பு நெஞ்சத்தால் வீழ்த்தும் வித்தையைக் கற்றுத் தேர்ந்தவர்கள் பெண்கள். பெண்மையை மதிக்கும் ஆண், பெண்களைக் காட்டிலும் மேலானவர். சில சமயங்களில் பெண்ணுக்கு எதிரியாகப் பெண்களே மாறி நிற்கும் ஒவ்வாமையை ஒழிக்க வேண்டும். பச்சிளங்குழந்தை எனப் பதறாமல் பெண் சிசுவை அழிக்கும் ஒரு மோசமான சூழ்நிலையில் மகளிர் தினம் கொண்டாடி மகிழ்வதைவிட, விழிப்புணர்வு தினமாகக் கடைப்பிடிக்கலாம்” என்று தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.
கடந்த 90-களில் தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பத்து ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். பிறகு மகப்பேறுக்கான சிறப்பு மருத்துவமனையாக விளங்கும் எழும்பூர் அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். இங்கு பத்தாண்டுகள் பணி நிறைவு செய்து, சேலம் மோகன்குமாரமங்கலம் மருத்துவமனை பிரசவ வார்டில், நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். இவை எல்லாம் பணி அனுபவம் தொடர்பான புள்ளி விவரங்கள் மட்டுமல்ல என்பதை ப் பணி சார்ந்த சுசீலாவின் ஈடுபாடும் அக்கறையும் நிரூபிக்கின்றன.
“தற்போது மூன்று மாதங்களாக மலைக்கிராமங்கள் நிறைந்த தும்பல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விரும்பி மாற்றலாகி வந்து பணியாற்றி வருகிறேன். ஒரு பெண் தாய்மைப்பேறு அடைந்த நேரத்தில் இருந்து ஒவ்வொரு நொடியும் தனக்குள் வளரும் பிஞ்சு உயிரைப் பற்றிய நினைவலைகளில் சுழலுவாள். உயிர்போகும் பிரசவ வேதனையை முன்கூட்டியே அறிந்தும், விரும்பியே அந்த உயிரைச் சுமப்பாள். இதோ குட்டிக் குழந்தை எட்டிப்பார்க்கும் தருணம் வந்து விட்டது. பனிக்குடமும் உடைந்து விட்டது. உறவுகள் பரபரப்படைந்து, கர்ப்பிணியைக் கைத்தாங்கலாக மருத்துவமனை பிரசவ வார்டு வரை விட்டு, பதற்றத்துடன் காத்திருப்பார்கள்” என்று பிரசவ நேரத்தின் பரபரப்பை ஒரு படம் போல் விவரிக்கும் சுசீலா, குழந்தையின் முதல் அழுகைச் சத்தம் கேட்டதும் தாயின் முகத்தில் பரவுகிற பரவச நொடி பேரானந்தமானது என்கிறார்.
கிராம சேவையே விருப்பம்
ஓர் உயிருக்குள் இருந்து இன்னோர் உயிரைப் பிரித்தெடுக்கிற வேலையை எப்படி இயந்திரகதியில் செய்ய முடியும் என்று கேட்கிற சுசீலா, பிரசவ நேரச் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் பகிர்ந்துகொள்கிறார்.
“நஞ்சுக்கொடி முன் வந்தும், சிசுவின் உடலைச் சுற்றிக்கொள்ளும் கொடியும் ஒரு வகைச் சிக்கல் என்றால் இரட்டைக் குழந்தை பிரசவிக்கும் தாயும், வலிப்பு துயரத்தில் துடிக்கும் கர்ப்பிணிகளும் நம்மைப் பதற்றத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடுவார்கள். இப்படிச் சிக்கல் நிறைந்த பிரசவங்கள் பலவற்றைச் சந்தித்திருக்கிறேன். இக்கட்டான பிரசவங்களையும் கையாண்டிருக்கிறேன். அனுபவம் மிக்க செவிலியர்கள் நகர்ப்புற மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கிராமப்புற பெண்களுக்கான மருத்துவ சேவையாற்ற முன் வர வேண்டும்” என்று வேண்டுகோள் வைக்கிற சுசீலாவுக்கு, நகர்ப்புறத்தில் பணியாற்றிய சுகத்தைவிட, இந்த மூன்று மாத கிராமப்புற சேவை மன நிறைவைத் தருகிறதாம்.
“இந்த மூன்று மாதத்தில் 35 பிரசவம் பார்த்தது எனக்குப் புது அனுபவம். காரணம் ஒரு பெண்கூடப் பிரசவ வேதனையில் அலறித் துடிக்கவில்லை. நெய்யமலையில் இருந்து 10 கி.மீ., கீழே இறங்கி வந்து, மாதம்தோறும் பரிசோதனை செய்து செல்கின்றனர். நடைப்பயிற்சியும், வீட்டு வேலைகளும்தான் அவர்களின் வலியில்லா பிரசவத்துக்குக் காரணம் என்பது புரிந்தது” என்கிறார் சுசீலா.
“விடுமுறை நாட்களில்கூடப் பிரசவ அவசரம் என்றால் வந்துவிடுவேன். சகல மருத்துவ வசதிகளும் நிறைந்திருக்கும் நகரங்களைக் காட்டிலும், பிரசவம் குறித்துப் போதிய தெளிவும் விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கும் கிராமப்புறப் பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை இந்த மகளிர் தினக் கொள்கையாக ஏற்றிருக்கிறேன்” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் சுசீலா. தன் ரோஜாப்பூ பாதங்களை உதைத்தபடி சிரிக்கிறது சுசீலாவின் மருத்துவ உதவியுடன் பிறந்த குழந்தை!