தமிழக பட்ஜெட் 2012 - 2013 :-
தமிழக அரசின் நிதியமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், 2012-2013 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை, 2012 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 26 ஆம் நாள் சட்டமன்றப் பேரவை முன் வைத்து உரை ஆற்றினார்மக்கள் நலவாழ்வு துறையில் அளிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் பிற பட்ஜெட் பலன்கள் இங்கு தரப்பட்டுள்ளது.
நன்றி: - தமிழக அரசின் இணையதளம்
மக்கள் நல்வாழ்வு துறை
பிறப்பு இறப்பு விகிதம்:-
மருத்துவத் துறையில் நமது நாட்டில் முன்னோடி மாநிலமாக தமிழகம் தொடர்ந்து விளங்குகிறது. இதற்குச் சான்றாக, பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயிரம் பிறப்புகளுக்கு 24 ஆகவும், பேறுகால பெண்கள் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 79 ஆகவும் குறைந்துள்ளன.எதிர்பார்க்கப்படும் வாழ்வு காலம் ஆண்களுக்கு 71.8 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 75.2 ஆண்டுகளாகவும் உயர்ந்துள்ளது. பல புதிய முயற்சிகள் மூலமாக, செயல்பாடுகளை மேலும் உயர்த்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு:-
2012-2013 ஆம் ஆண்டிற்கு, இந்த அரசு மருத்துவத் துறைக்கு 5,569.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
முதலமைச்சரின் விரிவாக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம்:-
2012 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 11 ஆம் நாள் முதலமைச்சரின் விரிவாக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தில் காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு நான்கு இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கூடுதலான நோய்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, நோய் கண்டுபிடிப்புக்கான செலவுகளையும் வழங்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், அரசுமருத்துவமனைகளின் பங்கினை மேலும் உயர்த்துவதற்கான சிறப்பு விதிமுறைகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதுவரை, 49.42 கோடிரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை 17,723 பயனாளிகள் பெற்று பயனடைந்துள்ளனர்.
2012-2013 ஆம் ஆண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மரு. முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம்:-
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், நாட்டிலேயே உயர்ந்த அளவான 12,000 ரூபாயாக நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளது. ஏழைப் பயனாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இத்திட்டம், தாய் சேய் இருவரின் உடல்நலத்தைப் பேணிக் காக்க பேருதவி புரிகிறது. மூன்று தவணைகளில் இந்த உதவியை வழங்கும் முறை, பிரசவத்திற்கு முன்பும் பின்பும் அளிக்கப்படும் மருத்துவ கவனிப்பையும், குழந்தைகளுக்கான நோய்த் தடுப்புச் சேவையையும் மேலும் வலுப்படுத்த வழி செய்துள்ளது.இத்திட்டத்திற்காக 720 கோடி ரூபாய் 2012-2013 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விலையில்லா சானிடரி நாப்கின்கள் அளிக்கும் திட்டம்:-
கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா சானிடரி நாப்கின்களை அளிக்கும் புரட்சிகரமான திட்டத்தை இந்த அரசு அறிவித்துள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ள இத்திட்டம், பெண்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படாமல் தடுப்பதற்கும் வழிவகுக்கும்.
இந்தியாவிலேயே முதல் முறையாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த முன் முயற்சியின் மூலமாக, கிராமப்புறங்களில் உள்ள 10 வயதிலிருந்து 19 வயதிற்கு உட்பட்ட 41 லட்சம் வளரிளம் பெண்கள் பயன்பெறுவார்கள். பள்ளிகள், அங்கன்வாடிகள் மூலமாக இந்த சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும்.
வரும் நிதியாண்டில் இந்தத் திட்டத்திற்காக 55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம்:-
தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்காக, 2012-2013 ஆம் ஆண்டில் இந்த அரசு 950 கோடி ரூபாய் செலவிடும். தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத வட்டாரங்களில், 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரும் ஆண்டில் தரம் உயர்த்தப்படும்.
இந்த அரசின் முந்தைய ஆட்சிக் காலத்தின்போது தொடங்கப்பட்ட தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம், வட்ட, மாவட்ட மருத்துவமனைகளில் பேறுகால மற்றும் குழந்தைகள் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகித்துள்ளது.
2012-2013 ஆம் ஆண்டில், இதற்காக 158 கோடி ரூபாய் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கட்டமைப்பு:-
மருத்துவத் துறையின் கட்டமைப்புகளை வலுப்படுத்த பல்வேறு முன் முயற்சிகளை இந்த அரசு எடுத்து வருகிறது . கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டவாறே, 385 வட்டாரங்களிலும் 29.36 கோடி ரூபாய் செலவில் நடமாடும் மருத்துவமனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முப்பத்தியொரு தொலைதூர இடங்களில் தொலை மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு ஏதுவான பணிகள் நடைபெற்று வருகின்றன.
2012-2013 ஆம் ஆண்டில் புதிய முயற்சிகளாக, மாவட்ட மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள அறுவைசிகிச்சை அரங்கங்கள் 20 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
பத்து கோடி ரூபாய் செலவில் பிரேதப் பரிசோதனை நிலையங்களின் வசதிகள் மேம்படுத்தப்படும். போதிய நோய்க் கண்டுபிடிப்பு வசதிகளை உறுதி செய்யும் வகையில், 10 கோடி ரூபாய் செலவில் நோய் கண்டுபிடிப்புக் கருவிகள் வழங்கப்படுவதோடு, ஐந்து மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசு-தனியார் ஒத்துழைப்பு மூலமாக எம்.ஆர்.ஐ. கருவிகள் அளிக்கப்படும்.
தீக்காய சிகிச்சை உயர்நிலை மையம்:-
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவு சிறப்பு உயர்நிலை மையமாக 5 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும்.
கிங் நிறுவனத்தில் திசு வங்கியை அமைப்பதற்கும், மீண்டும் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கவும், 5 கோடி ரூபாய் வழங்கப்படும்.
மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள்:-
புற்றுநோய்க்கு சிறப்பு மருத்துவச் சிகிச்சைகளுக்கான தேவைகள் அதிகரித்துவருவதைக் கருத்தில் கொண்டு, மதுரை அரசு இராஜாஜி பொது மருத்துவமனையிலும், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தலா 15 கோடி ரூபாய் செலவில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
மாநிலத்தின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள புற்று நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க இவை பேருதவியாக இருக்கும். இது தவிர, வாய்ப் புற்றுநோய் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து நோயை ஆரம்பகட்ட நிலையிலேயே கண்டறிவதற்கான புதிய திட்டமும் தொடங்கப்படும்.
என வரவு செலவு திட்டம் கணிக்கப்பட்டுள்ளது.